கர்நாடக சட்டசபை தேர்தல் – திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி இன்று பிரமாண்ட ஊர்வலம் நடத்துகிறார்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றால் அது பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு பலம் சேர்க்கும் என்று பா.ஜனதா தலைவர்கள் கருதுகின்றனர். இதையடுத்து, பெங்களூருவில் 17 சட்டசபை தொகுதிகளில் வேட்பாளர்களை கவரும் விதமாக இன்றும் (சனிக் கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்களில் ஒட்டு மொத்தமாக 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்ல உள்ளார். இந்த நிலையில், பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு தடை விதிக்க கோரி வக்கீல் அம்ருதேஷ் என்பவர், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணை நேற்று ஐகோட்டு நீதிபதிகள் கிருஷ்ணா எஸ்.தீக்சித் மற்றும் விஜய்குமார் எஸ்.பட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த விசாரணைக்காக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி, பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பிரதமரின் ஊர்வலத்தின் போது ‘நீட்’ தேர்வு நடைபெறுவதால், ஊர்வல திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
‘நீட்’ தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளுக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற்படாத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமரின் ஊர்வலத்தின் போது ஆம்புலன்ஸ் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதாப் ரெட்டி கூறினார்.
அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், சட்டசபை தேர்தலை ஒரு திருவிழா போன்று நடத்தி கொண்டாடி வருகிறோம். 19 சட்ட விதிகளின்படி அமைதியான முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது, பொதுக்கூட்டங்கள், ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி உள்ளது.
இந்த ஆண்டு 2,517 ஊர்வலங்கள் நடந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டசபை தேர்தலின் போது மாநிலத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. வருகிற 7-ந் தேதி (நாளை) ஊர்வலத்தின் போது ‘நீட்’ தேர்வு நடைபெற இருப்பதால் பிரதமரின் ஊர்வலத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
‘நீட்’ தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிவரை நடக்கிறது. அன்றைய தினம் பிரதமரின் ஊர்வலம் 11.30 மணியளவிலேயே முடிந்து விடும். அதனால் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் பிரதமரின் ஊர்வலத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது, என்றார்.
இதையடுத்து, பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் ஊர்வலத்தின் போது எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் முன் எச்சரிக்கையாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கி இருப்பதால் பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதையொட்டி மாநகர் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சுமார் 5 ஆயிரம் போலீசார் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பிரதமர் மோடி ஊர்வல பாதையில் உள்ள கடைகளை மூட போலீசார் கெடுபிடி செய்ததாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் ஊர்வலம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டின் உத்தரவு காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று நேற்று முன்தினம் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் மனு கொடுத்திருந்தனர். தற்போது ஐகோர்ட்டு அனுமதி வழங்கி இருப்பதுடன், தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி ஊர்லத்திற்கு அனுமதி கொடுத்திருப்பது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.