X

கர்நாடக சட்டசபை தேர்தல் – 10 நாட்கள் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி திட்டம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள். தற்போது மனு தாக்கல் நடைபெற்று வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டால், களத்தில் யார் உள்ளனர் என்பது தெரியவரும். அதன் பிறகு தேர்தல் களத்தில் பரபரப்பு அதிகரிக்கும். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி 7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒருமுறை வந்த மோடி, பந்திப்பூர் வனத்தில் சபாரி சென்று வன விலங்குகளை பார்த்து மகிழ்ந்தார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி வருகிற மே 1-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 10 நாட்கள் இங்கு பிரசாரம் செய்யும் அவர், சுமார் 30 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு ஓட்டு சேகரிப்பார் என்று கூறப்படுகிறது. அவரது பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 பிரசார கூட்டங்களில் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளார்.

அதே போல் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் 10-க்கும் மேற்பட்ட பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இது மட்டுமின்றி உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள், பா.ஜனதா முன்னணி தலைவர்கள், பிற மாநில பா.ஜனதா முதல்-மந்திரிகள் என பல தலைவர்கள் கர்நாடகத்தை முற்றுகையிட்டு பிரசாரம் செய்ய உள்ளனர்.

அதனால் வரும் நாட்களில் கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வருகிற 21, 22-ந்தேதிகளில் அமித்ஷா பிரசாரத்துக்காக கர்நாடகம் வருகிறார். அவர் பெங்களூரு, தேவனஹள்ளி, தாவணகெரேயில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.