X

கர்நாடக கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும் – எடியூரப்பா

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தாங்கள் கவிழ்க்க மாட்டோம், அது தானாகவே கவிழ்ந்துவிடும், என்று கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசுவாமியை நேற்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இந்த சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் உள்பட அனைத்து வளர்ச்சி பணிகளும் முடங்கிவிட்டன. மாநிலத்தில் மக்களின் நலனை இந்த அரசு மறந்துவிட்டது. தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறுகிறார்.

ஆனால் தேசிய வங்கிகள், கடனை திரும்ப செலுத்தும்படி விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றன. 4 ஆண்டுகளில் 4 தவணைகளில் இந்த கடன் தள்ளுபடி தொகையை வங்கிகளுக்கு செலுத்துவதாக குமாரசாமி சொல்கிறார். 4 ஆண்டுகள் வரை எந்த வங்கிகள் தான் காத்திருக்கும்?.

விவசாயிகளின் நலனில் அக்கறை இருந்திருந்தால், தேசிய வங்கிகளின் விவசாய கடனை இந்த அரசு உடனடியாக தள்ளுபடி செய்திருக்கலாம். அந்த அக்கறை இந்த கூட்டணி அரசுக்கு இல்லை. கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி தொகையை இந்த அரசு இன்னும் வழங்கவில்லை. அதனால் கூட்டுறவு வங்கிகள் திவாலாகி இருக்கின்றன.

நிலைமை இவ்வாறு மோசமாக இருந்தாலும் மக்களுக்கு குமாரசாமி பொய் வாக்குறுதிகள் கூறுவதை நிறுத்தவில்லை. கர்நாடகத்தில் மிடுக்கான திட்டத்திற்கு மத்திய அரசு ரூ1,500 கோடி நிதி வழங்கியுள்ளது. ஆனால் வெறும் ரூ.40 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டு உள்ளது.

ஈடுபாட்டு உணர்வு இல்லாத இந்த அரசால், கர்நாடகத்தின் வளர்ச்சி சாத்தியமாகுமா?. ஜார்கிகோளி சகோதரர்கள் பா.ஜனதாவில் சேருவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி என்னுடன் யாரும் பேசவில்லை. அது காங்கிரசின் உட்கட்சி பிரச்சினை.

காங்கிரசின் உட்கட்சி பிரச்சினைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை. காங்கிரசின் உட்கட்சி பிரச்சினையில் பா.ஜனதா இருப்பதாக கூறுவது சரியல்ல. மாநில மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் காங்கிரசார் இந்த குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், கந்துவட்டி தொழில் செய்பவர்கள் மூலம் பா.ஜனதா முயற்சி செய்வதாக முதல்வர் கூறி இருப்பது சரியல்ல. இது அவரது பொறுப்பற்றத் தனத்தை காட்டுகிறது.

இது குறித்து தகவல் இருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?. அதை விடுத்து தேவை இல்லாமல் பா.ஜனதா மீது குறை சொல்வதை ஏற்க முடியாது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நாங்கள் முயற்சி செய்ய மாட்டோம். இந்த அரசு தானாகவே கவிழ்ந்துவிடும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Tags: yeddyurappa