Tamilசெய்திகள்

கர்நாடக காண்டிராக்டர் தற்கொலை வழக்கை சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட முடிவு

பெலகாவி மாவட்டம் இண்டல்கா படசா கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் பட்டீல். காண்டிராக்டரான இவர், அரசு ஒப்பந்த பணிகளை செய்ததற்காக ரூ.4 கோடி வழங்க வேண்டிய இருந்தது. இதற்காக மந்திரி ஈசுவரப்பா 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக காண்டிராக்டர் சந்தோஷ் குற்றச்சாட்டு கூறிவந்தார். பின்னர் தான் தற்கொலை செய்ய போவதாகவும், அதற்கு மந்திரி ஈசுவரப்பா தான் காரணம் என்றும் வாட்ஸ்-அப் மூலம் சந்தோஷ் தெரிவித்திருந்தார்.

பின்னர் கடந்த 12-ந் தேதி உடுப்பியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சந்தோஷ் விஷம் குடித்து தற்கொலை செய்திருந்தார். இதுதொடர்பாக உடுப்பி டவுன் போலீசார், மந்திரி ஈசுவரப்பா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சந்தோஷ் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு ஒப்படைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சந்தோஷ் தற்கொலை வழக்கை சி.ஐ.டி. விசாரணை நடத்த உததரவிட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக போலீஸ் மந்திரி்அரக ஞானேந்திரா மற்றும் மூத்த மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி, பசவராஜ் பொம்மை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. சந்தோசின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும், சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி பசவராஜ் பொம்மை அறிவிக்க உள்ளார்.

அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் சந்தோஷ் தற்கொலை வழக்கு சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு மந்திரியாக இருந்த எச்.ஒய்.மேட்டி கற்பழிப்பு வழக்கில் சிக்கிய போது முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அதுபோல், தற்போதும் சந்தோஷ் தற்கொலை வழக்கில் மந்திரி ஈசுவரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை சி.ஐ.டி.க்கு மாற்ற உள்ளதாக தெரிகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தலின்படி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது என்பதில் பசவராஜ் பொம்மை உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.