Tamilசெய்திகள்

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இன்று டெல்லி செல்கிறார்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவி கேட்டு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 பேரும் பிடிவாதமாக இருப்பதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது.

இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் 1 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றுள்ளனர்.

அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் டெல்லி செல்வதாக கூறினார். அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார்.

சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா டெல்லி சென்ற நிலையில் டி.கே.சிவக்குமார் தனது பயணத்தை ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த கர்நாடக முதல்-மந்திரி யார் என்பது குறித்து ஆலோசிக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்தான நிலையில் இன்று அவர் டெல்லி செல்கிறார்.

பிரியங்கா காந்தி டி.கே.சிவகுமாரை டெல்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.