கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி மலர்ந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், ஆட்சி கவிழ்ந்திருந்தது. அந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் பா.ஜனதாவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் ஒசக்கோட்டை தொகுதியில் எம்.டி.பி.நாகராஜ் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர், கடந்த 14-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது பெயர் மற்றும் தன்னுடைய மனைவி சாந்தகுமாரி பெயரில் உள்ள சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். அதில், எம்.டி.பி.நாகராஜிக்கு ரூ.1,195 கோடி சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு(2018) கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலின் போது தனக்கு ரூ.1,015 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதன்மூலம் கடந்த 18 மாதத்தில் எம்.டி.பி.நாகராஜின் சொத்து மதிப்பு ரூ.180 கோடி உயர்ந்துள்ளது.
குறிப்பாக கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்பு கடந்த ஆகஸ்டு மாதம் 2-ம் தேதியில் இருந்து 7-ந்தேதி வரை மட்டும் எம்.டி.பி.நாகராஜிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் ரூ.48 கோடியே 76 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. எம்.டி.பி.நாகராஜ், அவரது மனைவி பெயரில் மொத்தம் 193 வங்கி கணக்குகள் இருப்பதாக வேட்புமனு தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனக்கு ரூ.29 கோடியே 90 லட்சம் கடன் இருப்பதாகவும், தனது மனைவிக்கு ரூ.1 கோடியே 57 லட்சம் கடன் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்.டி.பி.நாகராஜிடம் விலை உயர்ந்த பல சொகுசு கார்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எம்.டி.பி. நாகராஜிக்கு தான் அதிக சொத்துகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எம்.டி.பி.நாகராஜ் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசில் மந்திரியாக பதவி வகித்தவர்.