Tamilசெய்திகள்

கர்நாடக அமைச்சர் மாரடைப்பால் மரணம் – முதலமைச்சர் இரங்கல்

கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசில், உணவு வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் வனத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் உமேஷ் கட்டி (வயது 61). நேற்றிரவு பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தமது வீட்டின் கழிவறையில் உமேஷ், மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் ஏற்கனவே உமேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல், சுகாதார அமைச்சர் கே சுதாகர் மற்றும் பல பாஜக தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

உமேஷ் கட்டியின் அகால மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார். என்னுடைய மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன், அவர் எனக்கு சகோதரராக இருந்தார். அவருக்கு சில இருதய பிரச்சினைகள் இருந்தன, ஆனால் அவர் இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகேவாடியில் அரசு மரியாதையுடன் உமேஷ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும், பெலகாவி மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமைச்சர் உமேஷ் மறைவுச் செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

பெலகாவி மாவட்டத்தில் உள்ள பாகேவாடியில் பிறந்த உமேஷ் கட்டி, ஹுக்கேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எட்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். ஜே.எச்.படேல், பி.எஸ். எடியூரப்பா, டி.வி.சதானந்த கவுடா மற்றும் ஜெகதீஷ் ஷட்டர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக அவர் பணியாற்றியுள்ளார்.