கர்நாடகாவில் பதவியை ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். தங்களின் ராஜினாமா கடிதங்களை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஜூலை 16-ந் தேதி வரை நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே, கே.சுதாகர், எம்.டி.பி.நாகராஜ், முனிரத்னா, ரோஷன் பெய்க், ஆனந்த்சிங் மேலும் 5 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, ராஜினாமாவை ஏற்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட கோரினர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, ராஜினாமா கடிதங்களை ஏற்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது எனவும், சபாநாயகரே முடிவு எடுக்கலாம் என்றும் தீர்ப்பளித்தனர்.
“ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் முடிவு எடுக்கலாம். இதற்காக அவருக்கு காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது. கர்நாடக சட்டசபையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாததும் அவர்களின் விருப்பம். இந்த விஷயத்தில் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பு அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டால் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்.