காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் டெல்லியில் நடந்தபோது காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மழைக்காலத்தில் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது. மாண்டியா மாவட்ட விவசாயிகள் கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்தும், மாண்டியா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் குமாரசாமி கூறினார்.
இதற்கிடையே கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து நீர்ப்பாசன துறை அதிகாரிகளுடன் அமைச்சர் புட்டர்ராஜூஆலோசனை நடத்தி காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் தற்போதுள்ள நீரின் அளவு, தென்மேற்கு பருவ மழை நிலவரம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது என்றும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவுப்படி கபினி அணையில் இருந்து 500 கனஅடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 355 கனஅடியும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து மொத்தம் 855 கனஅடி அளவு தண்ணீர் காவிரி ஆற்றில் இன்று அதிகாலை திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல்லுக்கு வந்தடையும்.
பருவமழை பொய்து போனதால் காவிரி ஆற்று படுக்கை பகுதிகளில் வறண்ட நிலையில் காணப்படுகின்றன. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக மேட்டூர் அணைக்கு செல்லாது. மாறாக வறண்ட பகுதிகளில் தண்ணீர் உறிஞ்சும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
கர்நாடகா மாநிலம் குடகு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து குடகு பகுதியில் மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு மிதமான மழை பெய்துவருவதால் கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.