X

கர்நாடக அணிக்காக விளையாடி விக்கெட்கள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஜாஃப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்ச்சர். இவர் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சசெக்ஸ் அணி தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஆளுரில் 10 நாட்கள் பயிற்சிக்காக வந்துள்ளது. கர்நாடகா அணிக்கு எதிராக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் சசெக்ஸ் விளையாடியது. கர்நாடகா அணியில் இளம் வீரர்கள் முதல் சீனியர் வீரர்கள் வரை இடம் பிடித்திருந்தனர்.

சசெக்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அப்போது ஜாஃப்ரா ஆர்ச்சர் பந்து வீசவில்லை. 2-வது நாள் ஆட்டத்தின்போது கர்நாடகா அணியில் மாற்று (substitute) வீரராக களம் இறங்கினார். அவர் பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.
பந்து வீசிய ஆர்ச்சர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்.பி.டபிள்யூ. மூலம் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். 2-வது விக்கெட்டாக சக அணி வீரரை க்ளீன் போல்டாக்கினார்.

காயம் காரணமாக ஜாஃப்ரா ஆர்ச்சர் கடந்த 12 மாதங்களாக போட்டி கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக கடந்த சீசனில் மிகப்பெரிய அளவில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதனால் இந்த சீசனில் அவரை மும்பை அணி ரிலீஸ் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் அவர் இடம் பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழங்கை காயத்தால் ஜாஃப்ரா ஆர்ச்சர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.