கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வரி வசூல் பெறும் நிலையில், மத்திய அரசு திருப்பி அளிக்கும் நிதி மிகவும் குறைவு. வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என கார்நாடக மாநில முதல்வர் சித்தராமையா விமர்சனம் செய்தார்.
மேலும், டெல்லியில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது “வரி வசூலில் கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இந்த வருடம் கர்நாடகா 4.30 லட்சம் கோடியை விட அதிக வரிவசூல் பங்களிப்பை கொடுத்துள்ளது. நாங்கள் 100 ரூபாய் வரிவசூல் செய்து, அதை மத்திய அரசிடம் கொடுத்தால், அதன்பின் மத்திய அரசு எங்களுக்கு 12 ரூபாய் முதல் 13 ரூபாய் வரைதான் தருகிறது. இதுதான் எங்களுடைய பங்கீட்டு தொகை”என்றார்.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநில அரசின் குற்றச்சாட்டு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் கூறியதாவது:-
13-வது நிதிக் கமிசன் காலத்தில் (2010-11 முதல் 2014-15) கர்நாடகா 61,691 கோடி ரூபாய் பெற்றுள்ளது. 14-வது நிதிக்கமிசன் காலத்தில் (2015-16 முதல் 2019-20 வரை) ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 309 கோடி ரூபாய் பெற்றுள்ளது. தற்போதைய 15-வது நிதிக் கமிசன் காலத்தில் 2020-21 முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரை நான்கு ஆண்டு காலத்தில் தற்போதுவரை கர்நாடகா ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 854 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
இது முழுக்காலம் அளவில் தோராயமாக ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 339 கோடி ரூபாயாக இருக்கும். இது வரிப்பகிர்வு தொடர்பானது. மானிய உதவியை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு மத்திய ஆட்சி காலத்தில் கர்நாடகா 60 ஆயிரத்து 779 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
மோடியின் கடந்த 9 ஆண்டு காலத்தில் கர்நாடகா 2 லட்சத்து 8 ஆயிரத்து 832 கோடி ரூபாய் பெற்றுள்ளது. கூடுதலாக பட்ஜெட்டின்படி இந்த ஆண்டு 18 ஆயிரத்து 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதனால் கர்நாடகா 2 லட்சத்து 26 ஆயிரத்து 837 கோடி ரூபாய் பெறும். கர்நாடகா ஏற்கனவே 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் 6280 கோடி ரூபாய் பெற்றுள்ளது. கர்நாடகாவின் நிதி எங்கே மறுக்கப்படுகிறது. கர்நாடகா எங்கே நிதியை குறைவாக பெற்றுள்ளது.