X

கர்நாடகம், மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்காததால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. அடுத்து 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி தொடங்க முடியாத நிலை உள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.

உரிய நீரை வழங்க கோரியும், கர்நாடக மற்றும் காவிரி நீர் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், சீர்காழி, நாகை ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சையில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற உடனடியாக உரிய நீரை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்துடனான செயல்பாட்டை முடக்கக்கூடாது.

மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கக்கூடாது என்றும், விதிமுறைகளை மீறும் கர்நாடகா மற்றும் உரிய நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியவாறே ரெயிலை மறித்து போராட்டம் நடத்துவதற்காக தஞ்சை ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் பேரிகார்டு கொண்டு தடுத்தனர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து விவசாய சங்க நிர்வாகிகளை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ரெயிலை மறிக்க முயன்றதாக காவிரி விவசாய சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருவாரூரில் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திருவாரூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நின்று மன்னார்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவாரூர் ரெயில்வே போலீசார், திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகளை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. இதேபோல் சீர்காழி, நாகையிலும் போராட்டம் நடந்தது. தொடர் போராட்டத்தால் 4 ரெயில் நிலையம் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: tamil news