Tamilசெய்திகள்

கர்நாடகத்தில் புதிதாக இணைந்துள்ள 12 லட்சம் வாக்காளர்கள் பா.ஜ.கவை ஆதிரிக்க தயாராகி விட்டார்கள் – அமைச்சர் அஸ்வத் நாராயணன் பேட்டி

பெங்களூருவில் மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததும், அதற்காக ஒரு காரணத்தை கூறுவார்கள். பொதுவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரியில்லை என்பார்கள். தேர்தல் ஆணையமே சரியில்லை என்றும் கூட காங்கிரஸ் தலைவர்கள் சொல்லி இருக்கின்றனர். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர்கள் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் பேச்சு மூலமாகவே தெளிவாகி இருக்கிறது. ஏனெனில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்த தயாராக இருப்பதாக சுர்ஜேவாலாவும், சித்தராமையாவும் கூறி இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போதே பயம் வந்துள்ளது.

தேர்தலில் தோல்வி அடைந்தால், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை காரணம் என்று கூறி தப்பிக்க முயற்சிப்பார்கள். சட்டவிரோதமாக யார் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் தான் பயப்பட வேணடும். சுர்ஜேவாலா எதற்காக பயப்பட வேண்டும்.
கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆதரிக்க மக்கள் தயாராகி விட்டனர். கர்நாடகத்தில் புதிதாக 12 லட்சம் இளம் வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். அந்த இளம் வாக்காளர்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தயாராகி விட்டனர். முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. பதவிக்கான போட்டி ஒரு போதும் நிற்க போவதில்லை. இதுவே அவர்களது தோல்விக்கான மற்றொரு காரணமாக அமைய போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.