மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களின் கருத்துகளை வெளியிட்டனர்.
ஆனால் இந்த விஷயத்தில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து எதுவும் கூறாமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது மவுனத்தை கலைத்துள்ளார். எடியூரப்பா நேற்று தனது டுவிட்டரில் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நமது நாட்டில் அதிகாரப்பூர்வமாக உள்ள அனைத்து மொழிகளும் சமமானவை. கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம் தான் முதன்மையான மொழி. கன்னடத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். கன்னடத்தையும், கலாசாரத்தையும் மேம்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.