கர்நாடகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் பலி!
நாட்டில் கொரோனா வைரஸ் ஒருபுறம் மக்களை பலி வாங்கி வரும் நிலையில், மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழக்கும் அவலமும் தொடர்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்காக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனினும், ஆக்சிஜன் சரியான நேரத்திற்குள் சென்றடையாததால் உயிர்ப்பலி ஏற்படுகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றம் பிற காரணங்களால் கொரோனா நோயாளிகள் உள்பட 25 நோயாளிகள் இறந்துள்ளனர். இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படும்.
இந்த சம்பவம்பற்றி கேள்விப்பட்டதும் முதல்வர் எடியூரப்பா, மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். நடந்த சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக நாளை அமைச்சரவையை கூட்டி உள்ளார்.