Tamilசெய்திகள்

கருப்பையில் இருக்கும் போதே பச்சிளம் குழந்தைகளின் மூளையை தாக்கும் கொரோனா – ஆய்வில் தகவல்

2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெரும் உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானவர்களை நோயாளிகளாகவும் ஆக்கியது. இதைத்தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை கண்டு பிடித்து பொதுமக்களுக்கு செலுத்தியதன் பயனாக தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்து உலகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனாலும் அவ்வப்போது தொற்று உருமாற்றம் அடைந்து பல திரிபுகளாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்காக அச்சப்பட தேவையில்லை என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே கொரோனா ஏற்படுத்தும் நீண்ட கால பாதிப்புகள் குறித்தும் ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா காரணமாக கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளையில் பாதிக்கப்படுவது அமெரிக்க ஆய்வாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மியாமி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய விரிவான ஆய்வு குறித்து அமெரிக்காவில் பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பு, டெல்டா வகை தொற்று பரவல் உச்சத்தில் இருந்த போது கர்ப்பமாக இருந்த 2 இளம்பெண்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் 3-6 மாதங்கள் கர்ப்பமாக இருந்த போது அவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

அந்த பெண்களுக்கு பிறந்த இரு குழந்தைகளுக்கும் பிறந்த அன்றே வலிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முறையான வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. அதில் ஒரு குழந்தை 13 மாதங்களில் உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை மருத்துவர்கள் பராமரிப்பில் வைக்கப்பட்டது. ஆனால் பரிசோதனையில் 2 குழந்தைகளுக்கும் கொரோனா உறுதியாகவில்லை. இருந்த போதும் அவர்களது ரத்தத்தில் அதிகமான ஆன்டிபாடிகள் இருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக மியாமி பல்கலைக்கழகத்தில் குழந்தை மருத்துவர் மற்றும் உதவி பேராசிரியரான டாக்டர் மெர்லைன் பென்னி கூறினார். அதாவது கொரோனா முதலில் தாயிடம் இருந்து நஞ்சுக்கொடிக்கு வந்துள்ளது. அதன் பிறகு அது குழந்தைக்கு பரவியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த இரு குழந்தைகளின் தாய்களின் நஞ்சுக்கொடிகளிலும் வைரஸ் இருப்பதற்கான சான்றுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 13 மாதங்களில் உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனையிலும் அக்குழந்தையின் மூளையில் வைரசின் தடயங்களையும், நேரடி தொற்று காயங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

2 இளம்பெண்களுக்கும் கர்ப்பமாக இருந்த போது தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு நபருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்துள்ளது. மற்றொரு பெண்ணுக்கு வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்துள்ளது. இதனால் 32 வாரங்களில் குழந்தையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அரிதான வழக்காக இருக்கும் என்று கூறிய ஆய்வாளர்கள், கர்ப்பமாக இருக்கும் போது கொரோனா பாதிப்பு இருந்தால் வளர்ச்சி தாமதங்கள் குறித்து ஆய்வு செய்யும்படி மருத்துவர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்.

குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வரை அதாவது 7 அல்லது 8 வயது வரை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் முன்கூட்டியே தடுப்பூசி எடுத்து கொள்ளும் படியும் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் பச்சிளம் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் பாதிப்பு டெல்டா தொற்றால் மட்டுமே ஏற்படுகிறதா? அல்லது அனைத்து வகையான கொரோனாவாலும் ஏற்படுமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. முன்னதாகவே இதுபோல நடக்க வாய்ப்புள்ளதாக ஆய் ளர்கள் எச்சரித்து இருந்தனர். இப்போது 2 குழந்தைகளின் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது ஆய்வாளர்களின் எச்சரிக்கையை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து மியாமி பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் மைக்கேல் பைடாஸ் கூறுகையில், இடமாற்றம் செய்யப்பட்ட கருவின் உறுப்புகளின் வைரசை நிரூபிக்க முடிந்தது இதுவே முதல் முறை. அதனால் தான் இது மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறோம் என தெரிவித்தார்.