அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டன. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் நடந்த போராட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்றத்தில் இன்று இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வேண்டும். ராகுல் காந்திக்கு ஆதரவாக சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் பேசவேண்டும். சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.