X

கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்க முடியும் – ஐ.நா சபையில் இந்தியா கருத்து

ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேற்றப் பட்டது. இந்த தீர்மானம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா உள்பட 35 நாடுகள் புறக்கணித்தன.

முன்னதாக தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இந்தியா சார்பில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி, திருமூர்த்தி, உக்ரைனின் கார்கீவ் உள்பட போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து எங்கள் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் வெளியேற பாதுகாப்பான மற்றும் தடையற்ற பாதையை கோருவதாக கூறினார்.

உக்ரைனின் அண்டை நாடுகள் மூலம் இந்தியர்கள் வெளியேற்றுவதற்கு வசதியாக மூத்த அமைச்சர்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் எல்லையைத் திறந்து அனைத்து வசதிகளையும் எங்கள் தூதரகங்களுக்கு வழங்கியதற்காக, அனைத்து அண்டை நாடுகள் மற்றும் உக்ரைனுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம் என்றார்.

உக்ரைனில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலையில் உள்ளதாகவும், நாடுகள் இடையேயான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் மட்டுமே தீர்க்க முடியும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உக்ரைன்-ரஷியா இடையே உடனடி போர் நிறுத்ததிற்கான சர்வதேச நாடுகளின் அழைப்பை இந்தியா ஆதரிக்கிறது என்றும் திருமூர்த்தி கூறினார்.