Tamilசெய்திகள்

கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன. இங்கு இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.

இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைத்தார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

மறைந்த பின்னும் தமிழ் சமுதாயத்திற்காக பயன்படுபவர் தான் கருணாநிதி. 15 மாதங்களில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஒரு செங்கல் கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டவில்லை. கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு உயர் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

ஏழை எளிய மக்களின் மருத்துவராக இருந்தவர் கருணாநிதி. திறப்பு விழாவிற்கு வர விடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர். மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. நாட்டிற்கே பல முன்மாதிரியான திட்டங்களை திமுக கொண்டு வந்துள்ளது.

எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களை தேடி மருத்துவம் மூலம் 1.46 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இருசக்கர அவசர ஊர்தி, பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்தி என பல்வேறு திட்டங்கள் உள்ளது. கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம். வேலூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தங்கும் விடுதி கட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.