கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்

பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை வளாகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் நினைவிடம், மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் பாரம்பரிய கட்டிடங்களை புனரமைத்தல்.

சுகாதாரத்துறை கட்டிட பணிகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலக கட்டிட பணிகள், பள்ளி, நீதிமன்ற கட்டிட பணிகள், நினைவகங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர முக்கிய அரசு கட்டிடங்களில் இயங்கி வரும் மின் தூக்கி, குளிர்சாதன வசதி மற்றும் இதர மின் வசதிகளை அவ்வப்போது முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நினைவக கட்டிட பணிகள் மற்றும் சிலை அமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து மேற்கொள்ளவும், பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு பணிகள் தொடங்குவதற்கு முன்பு பெறப்படவேண்டிய கட்டிட வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை பெற தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ‘தரமே நிரந்தரம்’ என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை என்ஜினீயர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news