கருணாநிதியின் மறைவால் பிறந்தநாளை தவிர்த்த க.அன்பழகன்
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை வருத்திக்கொண்டு பாடுபட்ட தலைவர் கருணாநிதி, உடல் நலிவுற்று, அண்ணா நினைவிடத்துக்கு அருகில், மீளாத் துயிலில் ஓய்வெடுக்கச் சென்ற நிலையிலும், புயலின் கோரத் தாக்கத்தால், மக்களும், மரங்களும் பெரும் அழிவைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்னலுறும் நிலையில், வருகிற 19-ந்தேதி எனது 97-வது பிறந்தநாள் விழாவினைத் தவிர்த்திட விழைகிறேன்.
மேலும், என் உடல்நிலை கருதி, அந்த நாளில் கட்சித் தொண்டர்கள், உறவினர்கள், என்னை நேரில் காண்பதை முழுமையாகத் தவிர்க்க அன்புடன் வேண்டுகிறேன். மக்கள் நலம் காக்கும் சமுதாயப் பணிகளையும், இயக்கப் பணிகளையும் தொடர்ந்து ஆற்றிட வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.