கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கர்ப்பம் தரித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் அவர் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். அதுவும் அந்த பெண்ணை 2 மருத்துவர்கள் பரிசோதித்து அவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்த கடுமையான சட்டத்தை நீக்க வேண்டும் எனவும், கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாகாது என்பதை அறிவிக்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டம் நிறைவேறும் பட்சத்தில் பெண்கள் கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள் மருத்துவரின் உதவியோடு கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். இதற்காக அவர்கள் எந்த சட்ட வழிமுறைகளையும் பின்பற்ற தேவையில்லை. இதுகுறித்து அந்நாட்டின் நீதித்துறை மந்திரி ஆன்ட்ரூ லிட்டில் கூறுகையில், “உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பாதுகாப்பான கருக்கலைப்பு அவசியமாகிறது. ஒரு பெண்ணுக்கு தனது உடலில் என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது” என கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools