கமிஷனுக்கு ஆசைப்பட்டு கொல்கத்தா போலீசிடம் சிக்கிய திண்டுக்கல் இளைஞர்
திண்டுக்கல் அடுத்துள்ள வடமதுரை சத்யா நகரை சேர்ந்த ஜெயராமன் மகன் ராஜேந்திரன்(35). இவர் செல்போன் கடையுடன் சிம் கார்டுகள் விற்பனையும் செய்து வந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு கால் செய்த ஒரு நபர் உங்களின் செல் நம்பர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது அதனால் உங்களின் நம்பரை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் அதன் வாட்ஸ்அப்-பை மட்டும் நான் பயன்படுத்திக் கொள்கிறேன். அதற்காக உங்களுக்கு நான் பணம் அனுப்புகிறேன் என்று ஒரு பெரிய தொகையை அனுப்பியுள்ளார்.
பணம் கிடைத்த சந்தோஷத்தில் நம்பரை இவரே வைத்துக்கொண்டு வாட்ஸ் அப்பை மட்டும் டெலிட் செய்ய போனில் பேசிய நபரும் இந்த எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பை பயன்படுத்த தொடங்கினார். அந்த எண் மூலம் அந்த மர்ம நபர் லோன் வாங்கி தருகிறேன் என்றும் பெண்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவர்களிடம் பணம் பறித்து வந்தது தெரியவந்தது.
கொல்கத்தாவை சேர்ந்த அந்த வாலிபர் லோன் வாங்கி தருவதாக பெண்களிடம் புகைப்படம் மற்றும் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை பெற்றுள்ளார். அதன்பிறகு பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். பயந்துபோன பெண்களும் அவரது எண்ணுக்கு பணம் கொடுத்து வந்துள்ளனர். அந்த பணம் அனைத்தும் ராஜேந்திரன் அக்கவுண்டில் ஏறி உள்ளது.
பணம் ஏறியதும் அந்த மர்ம நபர் கால் செய்து உங்கள் கமிஷன் தொகையை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகையை உங்கள் நம்பருக்கு ஓ.டி.பி அனுப்புகிறேன். அந்த ஓடிபி நம்பரை சொல்லுங்கள் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று தொடர்ந்து பணத்தை எடுத்து வந்துள்ளார். ராஜேந்திரனும் தனக்கு பணம் கிடைக்கின்றதே என்ற சந்தோஷத்தில் தான் செய்வது தவறு என்று புரியாமல் தொடர்ந்து அவருக்கு உடந்தையாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா லால் பஜார் பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாகவும், ஏற்கனவே தான் அவருக்கு ரூ.1½ லட்சம் பணம் கொடுத்த நிலையில் மீண்டும் பணம் கேட்பதாகவும் கூறியுள்ளார். பணம் தரவில்லை என்றால் எனது புகைப்படத்தை ஆபாசமாக வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் கூறினார்.
இதனையடுத்து அந்த எண்ணை கொல்கத்தா சைபர் கிரைம் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் திண்டுக்கல் வடமதுரையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவரவே திண்டுக்கல் வந்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த செல்போன்கள் மற்றும் லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனைதொடர்ந்து விசாரணைக்காக அவரை கொல்கத்தா போலீசார் தங்கள் ஊருக்கு அழைத்துச்சென்றனர்.