X

கமல்ஹாசனுடன் ராகுல் காந்தி உரையாடல் வீடியோ வெளியானது

கடந்த மாதம் 24-ந் தேதி, டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடந்தபோது, அதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். ராகுல்காந்தியுடன் நடந்து சென்றார். அதைத்தொடர்ந்து, ராகுல்காந்தியை தனியாக சந்தித்து பேசினார். அப்போது இருவரும் நடத்திய உரையாடல் அடங்கிய வீடியோவை ராகுல்காந்தி நேற்று வெளியிட்டார். உரையாடலில் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-

உக்ரைனிடம் ரஷியா என்ன சொல்கிறது என்றால், ”நீங்கள் மேலை நாடுகளுடன் வலிமையான உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படி வைத்துக்கொண்டால், உங்கள் பூகோள அமைப்பையே மாற்றி விடுவோம்” என்கிறது.

அதே அணுகுமுறையைத்தான் இந்தியாவிடம் சீனா பின்பற்றுகிறது. ”உங்கள் செயல்களில் கவனமாக இருங்கள். ஏனென்றால், உங்கள் பூகோள அமைப்பை மாற்றி விடுவோம். லடாக்கில் நுழைவோம். அருணாசலபிரதேசத்தில் நுழைவோம்” என்று சொல்கிறது. அந்த அணுகுமுறைக்கான அடித்தளத்தை அமைத்துக்கொண்டிருக்கிறது என்று கருதுகிறேன்.

பாதுகாப்பு என்பது 21-ம் நூற்றாண்டில் முழுமையான விஷயமாகி விட்டது. ஒவ்வொரு நாடும் உலகளாவிய பார்வை கொண்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தவறாக கணக்கு போட்டு விட்டது. மோதலுக்கான அர்த்தமும் மாறிவிட்டது. முன்பெல்லாம், எல்லையில் மட்டும்தான் சண்டை நடக்கும். தற்போது, எங்கு வேண்டுமானாலும் சண்டை போட வேண்டி இருக்கிறது.

உள்நாட்டில் ஒற்றுமை நிலவுவது 21-ம் நூற்றாண்டில் முக்கியமான விஷயம். உள்நாட்டில் நல்லிணக்கம் நிலவ வேண்டும். ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது. அமைதி நிலவ வேண்டும். தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும்.

போருக்கு போக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நம்மை யாரும் தாக்க முடியாத நிலைக்கு போக வேண்டும் என்று சொல்கிறேன். சீனா நமது நிலப்பகுதியில் அமர்ந்து இருப்பதற்கும், பலவீனமான பொருளாதாரத்துக்கும் தொடர்பு இருக்கிறது. ஏனென்றால், நாம் உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருவதை சீனா அறியும். எனவே, உள்ளே நுழைந்து, தாங்கள் விரும்பியதை செய்யலாம் என்று கருதுகிறது.

ஒரு இந்தியனாக, சிலரைப்போல் நான் போருக்கு அலையவில்லை. உண்மையான பிரச்சினை, எல்லையில் இருக்கிறது. அந்த பிரச்சினைகளுக்கும், உள்நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கும் தொடர்பு இருக்கிறது.

இந்தியர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும்போது, பொருளாதாரம் பலவீனமாக இருக்கும்போது, வேலையில்லா திண்டாட்டம் நிலவும்போது, அதை நமது வெளிநாட்டு எதிரி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது. இதுகுறித்து பத்திரிகைகளிடம் பேசாவிட்டாலும், எதிர்க்கட்சிகளுடன் பேசுமாறு ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவரும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் மத்திய அரசு நடந்து கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.