அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி தற்போதைய அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் களமிறங்கி உள்ளார். துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், எதிர்க்கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை தாக்கினார். கமலா ஹாரிசை மக்கள் விரும்பவில்லை என்றும், அவர் ஒருபோதும் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக வர முடியாது என்றும் கூறினார். கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அமெரிக்காவுகு அவமானம் என்றும் டிரம்ப் கடுமையாக பேசினார்.
‘ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். ஜோபிடன் வென்றால், சீனா வென்றுவிட்டது என்று பொருள். கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேறிய பிறகும், வரும் தேர்தலில் பிடென் அவரை தனது துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் கலிபோர்னியாவில் வெற்றி பெற வேண்டும்.
உலக வரலாற்றில் மிகப் பெரிய பொருளாதாரத்தை நாங்கள் கட்டியெழுப்பும் சூழ்நிலை உள்ளது. ஆனால், சீனாவின் கொரோனா வைரஸ் வந்ததால் அதை மூடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டோம். இப்போது பொருளாதாரத்தை திறந்துவிட்டுள்ளோம்’ என்றும் டிரம்ப் கூறினார்.