Tamilவிளையாட்டு

கபில்தேவ் இடத்தை பிடிக்கும் திறமை அஸ்வினுக்கு உள்ளது – முன்னாள் வீரர் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல் ரவுண்டர் எப்போதும் கபில்தேவ் தான். இருப்பினும், தற்போது அஷ்வின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்வதாக நியூசிலாந்தின் ஆல் ரவுண்டர் மெக் மில்லன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமீப காலமாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச்சில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதுதவிர 2755 ரன்கள் குவித்துள்ளார். அதில் 5 சதங்கள் அடங்கும். தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அஷ்வின் அசத்தி வருகிறார்.

குறிப்பாக, நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் மிக முக்கியமான கட்டத்தில் அஸ்வினும், ஷ்ரேயாஸ் அய்யரும் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு அபாரமாக விளையாடினர். அந்தப் போட்டியில் அஸ்வின் 32 ரன்களை குவித்தார்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிரேக் மெக்மில்லன், அஸ்வினின் ஆட்டம் குறித்து புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்தியாவைப் பொருத்தவரை சிறந்த ஆல் ரவுண்டராக எப்போதும் கபில்தேவ் திகழ்கிறார். அந்த இடத்தை நெருங்குவதற்கு அஸ்வினுக்கு வெகுதூரம் இல்லை. இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டராக அஜித் அகர்கர், இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இருந்தாலும், என் மனதுக்கு சட்டென நினைவுக்கு வருவது அஸ்வின்தான். அவருக்குப் போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை என நினைக்கிறேன்.

அவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் மட்டுமல்லாமல், இந்திய அணிக்காக சதங்களை விளாசியவர். குறிப்பாக, சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது. முக்கியமான அந்த நேரத்தில் களமிறங்கிய அஸ்வின், பிரமாதமாக விளையாடி சதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார்.

இவ்வாறு மெக் மில்லன் கூறினார்.