இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் தீபாவளி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று முதல் செயல்பட உள்ளன. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்நிலையில், வேலூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளுக்கு செல்ல ஆர்வமாக இருந்த மாணவர்கள் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததையடுத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.