கன மழை காரணமாக திண்ட்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. கொடைக்கானல், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் இரவில் கனமழையாக தீவிரமடைந்தது.
திண்டுக்கல்லில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய கனமழை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. அதன்பின்பு மழையின் தீவிரம் குறைந்து சாரல் மழையாக விட்டு விட்டு பெய்தது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை முதல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையிலும் தொடர்ந்தது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.
விடுமுறை அறிவிப்பு சற்று தாமதமாக வந்த நிலையில் பல கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் அதிகாலையிலேயே வரத் தொடங்கினர். விடுமுறை அறிவிப்பு தெரிந்த பிறகு அவர்கள் மழையில் நனைந்து கொண்டே தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். இதேபோல், கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.