கன மழையால் கேரளாவின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது – பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம்

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பல மணி நேரம் விடாமல் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. சில இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.

கஜக்கூட்டம் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்ததால் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு துணை மின் நிலையத்திலும் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் பல இடங்களில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன.

வெள்ளத்தில்சிக்கி தவித்த பொதுமக்களை பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளில் சென்று மீட்டு நிவாரணை முகாம்களில் தங்க வைத்தனர். பொதுமக்களை தங்க வைப்பதற்காக திருவனந்தபுரம் மாவட்டம் முழுவதும் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. திருவனந்தபுரம் தாலுகாவில் உள்ள 16 முகாம்களில் 580 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சிராயின்கீழ் தாலுகாவில் அமைக்கப்பட்டிருக்கும் 4 முகாம்களில் 249 பேரும், வர்கலா தாலுகாவில் உள்ள நிவாரண முகாமில் 46 பேரும் தங்கியிருக்கின்றனர்.

மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள 21 நிவாரண முகாம்களில் மொத்தம் 900பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை, கட்டக்கடா, நெடுமங்காடு, வர்க்கலா, சிராயன்கீழ் ஆகிய தாலுகாக்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

உதவி தேவைப்படுவோர் கட்டுப்பாட்டு மையங்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் நாளை மறுநாள்(18-ந்தேதி) வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்க ளுக்கு இன்றும், நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு 18-ந் தேதியும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதியை சேர்ந்த பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news