Tamilசெய்திகள்

கன மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கம்

வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

இந்திய வானிலை ஆய்வு மையம், வெளியிட்ட அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து 8-ந்தேதி காலை வடதமிழக கடலோரப் பகுதியின் அருகில் வந்தடையக் கூடும் என்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கன மற்றும் மிக கனமழை பொழிவு ஏற்படும் பகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (7-ந்தேதி):- கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

8-ந்தேதி:-திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேற்சொன்ன மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 9-ந்தேதி:- திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் கனமழையை எதிர்கொள்ள பின்வரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு கடற்கரைப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றுள்ள 532 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக உள்ளன. கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள 93 மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் இன்று கரைக்குத் திரும்புகின்றனர். மேலும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 805 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.

பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும்போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.