Tamilசெய்திகள்

கன்வார் யாத்திரை – இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

கன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகங்கள் தங்களுடைய உரிமையாளர்கள் பெயர், உணவகங்களில் பணிபுரியும் நபர்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்களை வெளியிட வேண்டும் (காண்பிக்க வேண்டும்) என உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்ட போலீஸ் அதிகாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநிலத்திலும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முசாபர்நகர் போலீசாரின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 22-ந்தேதி பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன் உத்தரவை எதிர்த்து போடப்பட்டுள்ள மனு தொடர்பாக விளக்கம் அளிக்க நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று பெயர்ப்பலகை தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ரிஷிகேஷி ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டி அடங்கிய பெஞ்ச் “ஜூலை 22-ம் தேதி மீதான உத்தரவின் மீது எந்த விளக்கமும் அளிக்க எந்த காரணமும் இல்லை. என்ன தேவையோ அதை நாங்கள் ஜூலை 22-ம் தேதி உத்தரவில் தெரிவித்துவிட்டோம். பெயரை வெளியிட வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது” எனத் தெரிவித்தது.

அத்துடன் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள், தங்களுடைய உத்தரவுகளுக்கு எதிரான மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். அதேபோல் மனுதாரர்கள் தங்களுடைய பதிலை அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள் ஆகஸ்ட் 5-ந்தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அரசின் இந்த உத்தரவு அமைதியை உறுதிசெயவும், யாத்திரைக்கு பாதிப்பில்லாத வகையில் சீராக நடத்தவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவே ஆகும். தவறுதலாகக் கூட கன்வர் யாத்ரீகர்களின் மத நம்பிக்கை புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காவதும், முந்தைய காலங்களில் நடந்த சில அசௌகரியங்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என உத்தர பிரதேச மாநிலம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.