Tamilசெய்திகள்

கன்னியாகுமரி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை – 150 கிலோ கெட்டுப்போன உணவுகள் அழிப்பு

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல்களில் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள 5-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் சோதனை மேற்கொண்ட போது மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு 150 கிலோவுக்கும் மேற்பட்ட பழைய மற்றும் கெட்டுபோன உணவு பொருட்களை கைப்பற்றி அவற்றை குப்பைத் தொட்டியில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர். அத்துடன் 5 ஓட்டல்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் கூறும்போது, ‘ உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து வழங்கினாலோ, செயற்கையான வண்ண பொடிகளை சமையலில் பயன்படுத்தினாலோ அந்த ஓட்டல்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும். ஓட்டல்களில் தரமற்ற உணவுகளை வழங்கினால் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்’ என்றார்.

இந்த சோதனையின்போது அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன், தக்கலை வட்டார அலுவலர் பிரவீன் ரகு, குளச்சல் வட்டார அலுவலர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.