கன்னியாகுமரியில் 1000 மாணவிகளுடன் யோகா பயிற்சி செய்த மத்திய அமைச்சர்
2014-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவில் உள்ள முக்கியமான 75 இடங்களில் பலதரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் இன்று யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அரசின் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சார துறை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டு யோகா சனம் செய்தார்.
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
முன்னதாக அதிகாலை 6 மணிக்கு சூரியன் உதயமாகும் நேரத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மத்திய மந்திரி மீனாட்சி லேகி , மத்திய தொல்லியல் கலாச்சாரத் துறை அலுவலர்களுடன் யோகாசனம் செய்தார்.