X

கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட கூகுள் நிறுவனம்!

இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால் கன்னடம் என கூகுள் காட்டியிருந்தது.

இதனால் கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கூகுள் நிறுவனத்தின் இந்த செயலுக்கு கன்னட மொழி வளர்ச்சி மந்திரி அரவிந்த் லிம்பவலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களிலும் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக கன்னட மக்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்டதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அதில் கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என தெரிவித்துள்ளது.

மேலும், கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடு தளத்தில் தவறாக வெளியான பதிவுகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.