கன்னட நடிகர் தர்ஷனுக்கு சினிமாவில் நடிக்க தடையா?

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷன் கன்னட திரைத்துறையின் முக்கியமான, முன்னணி நடிகராக உள்ளார். இந்த குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு கன்னட திரைத்துறையில் நடிக்க நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இதுகுறித்து விவாதிப்பதற்காக கர்நாடக திரைப்பட வா்த்தக சபை தலைவர் என்.எம்.சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நடிகர் தர்ஷனுக்கு திரைத்துறையில் நடிக்க தடை விதிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு என்.எம்.சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட திரைத்துறையில் தர்ஷன் மிகப்பெரிய நடிகர். இந்த கொலையை நாங்கள் கண்டிக்கிறோம். ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நாங்கள் ஆறுதல் தெரிவிக்கிறோம். சினிமாவில் நடிக்க தர்ஷனுக்கு தற்போதைக்கு தடை விதிக்கவில்லை. அவர் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டால், அதன் பிறகு நாங்கள் மீண்டும் கூடி ஆலோசித்து தடை விதிப்பது குறித்து முடிவு எடுப்போம்.

ரேணுகாசாமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நாங்கள் இன்று சித்ரதுர்காவுக்கு செல்கிறோம். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவியை செய்ய உள்ளோம். தவறு செய்தவர்கள் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும். இதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools