நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கனா’.
பணக்கார விளையாட்டான கிரிக்கெட் மூலம் சாதிக்க வேண்டும் என்று கிராமத்து பெண் ஒருவர் ஆசைப்பட, அவரது ஆசையை புரிந்துக்கொண்ட அவரது அப்பாவான விவசாயி தனது மகளின் ஆசையை எப்படி நிறைவேற்றுகிறார், அந்த மகள் தனது கனவை நிஜமாக்கினாரா இல்லையா, என்பதே ‘கனா’ படத்தின் கதை.
விவசாயியான சத்யராஜ் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள். அவரது அப்பா இறந்த நிலையிலும் டிவி-யில் திருட்டுத்தனமாக கிரிக்கெட் பார்க்கும் அளவுக்கு தீவிர கிரிக்கெட் ரசிகராக இருக்கிறார். இந்தியா ஒரு போட்டியில் தோல்வி அடைய, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் சத்யராஜ் கண் கலங்குகிறார். அதை பார்க்கும் அவரது மகள், தான் கிரிக்கெட் விளையாடி இந்தியாவை ஜெயிக்க வைத்து தனது அப்பாவை சிரிக்க வைக்க வேண்டும், என்று எண்ணுகிறாள். சிறுமியின் இத்தகைய எண்ணம், அவருடன் சேர்ந்து வளர, ஒரு கட்டத்தில் ஊரில் உள்ள ஆண்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட தொடங்குபவர், தனது அப்பாவின் ஆதரவு இருந்தாலும், ஊர் மக்கள், அம்மாவின் எதிர்ப்புகளுக்கு ஆளாகிறார். இருப்பினும், தனது திறமையாலும் பிடிவாதத்தினாலும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி, இந்திய அணியில் இடம்பிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், அங்கிருக்கும் அரசியலால் துவண்டு போக, பிறகு அவர் எண்ணியது நடந்ததா இல்லையா என்பதை மட்டும் ‘கனா’ வின் கதையாக சொல்லாமல், அதனுடன் விவசாயம் பற்றியும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியிருக்கிறார்.
விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள் என்றாலே அதன் திரைக்கதை எப்படி இருக்கும், என்பதை ஓரளவு யூகித்து விட முடியும். அப்படி தான் இந்த கதையும் என்றாலும், பெண்களை மையப்படுத்திய படம் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்த படம் என்பதில் இப்படம் வித்தியாசப்படுகிறது. அத்துடன் விளையாட்டை பற்றி மட்டுமே பேசாமல், விவசாயம் பற்றியும் பேசியிருப்பது இப்படத்தின் மிகப்பெரிய பலம்.
ஹீரோக்களுடன் ஆடி பாடி சிகர்களின் கனவு கண்ணியாகவில்லை என்றாலும், தமிழ் சினிமாவின் நடிக்க தெரிந்த நடிகைகளில் முக்கியமானவராக ஐஸ்வர்யா ராஜேஷ் உருவெடுத்துள்ளார். 16 வயது பெண் வேடமாக இருந்தாலும் சரி, 16 வயது பிள்ளைக்கு அம்மா வேடமாக இருந்தாலும் சரி, அத்தனையிலும் கச்சிதமாக பொருந்துவது மட்டும் இன்றி, அதில் கனகச்சிதமான நடிப்பையும் வெளிப்படுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படத்தில் ஒரு பெண் கிரிக்கெட்டராக தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ், விவசாயிகளின் துயரங்களை உணர்த்தும் வகையில் நடித்ததோடு, அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்திலும் நடித்திருக்கிறார்.
ரமா, தர்ஷன், இளவரசு என்று படத்தில் நடித்த மற்ற நடிகர்களின் கதாபாத்திரமும், அவர்களது நடிப்பும் இயல்பாக இருக்க, கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயனின் வேடமும், அதில் அவர் காட்டிய ஈடுபாடும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் திபு நினன் தாமாஸ், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் எடிட்டர் இவர்களும் படத்தின் ஹீரோக்கள் தான் என்று சொல்லும் அளவுக்கு இவர்களது பணி படு ஜோராக அமைந்திருக்கிறது. கிரிக்கெட் போட்டி காட்சிகளை படமாக்கிய விதமும், எடிட் செய்த விதமும், உண்மையான கிரிக்கெட் போட்டியை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.
விளையாட்டை மையமாக வைத்த படங்களுக்கு விறுப்பு என்பது ரொம்பவே முக்கியம். அதை ரொம்ப நன்றாகவே புரிந்து இப்படத்தின் திரைக்கதையையும், காட்சிகளையும் வடிவமைத்திருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், இந்தியாவே கொண்டாடும் கிரிக்கெட்டை கதைக்களமாக எடுத்துக்கொண்டாலும், அழிந்து வரும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
தான் சொல்ல வந்ததை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் நேர்த்தியாக சொன்னாலும், ஐஸ்வர்யா ராஜேஷ் இந்திய அணியில் இடம்பிடிப்பது, அவர் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை மற்ற படங்களைப் போலவே காட்சிப் படுத்தியிருப்பதோடு, இந்திய அணியில் நடக்கும் அரசியலை அழுத்தமாக சொல்லாமல், சினிமாத்தனமாக சொல்லி படத்தை முடித்திருக்கிறார். அதேபோல், படத்தில் வரும் சச்சின் மற்றும் டெண்டுல்கர் என்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்க, பல வகையில் முயற்சித்தாலும், அவர்களது டைமிங் சரியாக ஒர்க் அவுட் ஆகாமல் போவதால் காமெடி காட்சிகள் எல்லாம் கடுப்பேற்றும் காட்சிகளாகி விடுகிறது.
“ஜெயிச்சிடுவேன் என்று சொன்னா இந்த உலகம் கேட்காது, ஜெயிச்சவன் சொன்னா தான் கேட்கும்” என்று சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேசும் வசனத்திற்கு ஒட்டு மொத்த திரையரங்கமே கைதட்டலால் அதிர்கிறது.
நல்ல வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, விவசாயம் பற்றிய நல்ல மெசஜ் என்று அனைத்து தரப்பினரும் பார்க்கும் அளவுக்கு படத்தில் பல நல்ல விஷயங்களை வைத்திருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், அதை கமர்ஷியலாக சொல்ல முயற்சி சில இடங்களில் டாக்குமெண்டரி போல சொல்லியிருப்பதும் படத்திற்கு சற்று பலவீனத்தை கொடுத்திருக்கிறது. இருப்பினும், முழு திரைப்படமாக ‘கனா’ நேர்த்தியான படமாகவே உள்ளது.
மொத்தத்தில், இந்த ‘கனா’ வை அனைவரும் தாராளமாக காணலாம்.
-ஜெ.சுகுமார்