கனமொழை எதிரொலி – தென்காசி, நீலகிரி மாவட்டத்தின் குறிப்பிட்ட தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தென்மேற்கு பருவமழை காரணமாக தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை கொட்டியது. இந்த மாவட்டங்களில் நேற்று பகலில் சாரல் மழை பெய்தது. சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், கடையம், கீழப்பாவூர் ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.