Tamilசெய்திகள்

கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி கோவில் தரிசனம் நிறுத்தப்பட்டது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை தொடங்கிய பலத்த மழை நள்ளிரவு வரை தொடர்ந்த போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் இருந்தனர். வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்ராவிலிருந்து கோவிலை நோக்கி பக்தர்கள் வருவது நிறுத்தப் பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் தலைமை செயல் அதிகாரி அன்ஷுல் கர்க் தெரிவித்தார்.அவசர தேவைக்காக பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.