Tamilவிளையாட்டு

கனடா ஓபன் டென்னிஸ் – அல்காரஸ், ஸ்வியாடெக் 3 வது சுற்றுக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-2, 7-5 என்ற செட்டில் இத்தாலியின் அர்னால்டியை விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 3-6 என்ற நேர்செட்டில் மான்பில்சிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே), மெக்டொனால்டு (அமெரிக்கா), ஜானிக் சின்னெர் (இத்தாலி) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 7-6 (8-6), 6-2 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

2-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் பெட்ரா மார்டிச்சை (குரோஷியா) தோற்கடித்தார். இதே போல் கிவிடோவா (செக்குடியரசு), டேனிலி காலின்ஸ் (அமெரிக்கா), வான்ட்ரோசோவா (செக்குடியரசு), லேலா பெர்னாண்டஸ் (கனடா), கரோலினா முச்சோவா (செக்குடியரசு), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.