கனடாவின் ரெஜினா மாகாணம், ஜேம்ஸ் ஸ்மித் கிரீ நேசன் மற்றும் வடக்கு சஸ்காடூனில் உள்ள வெல்டன் கிராமத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 2 பேர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரெஜினா மாகாணத்தில் நடந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது என்றும். 13 இடங்களில் இந்த தாக்குதல் நடத்திருப்பதாகவும், துணை கமிஷனர் பிளாக்மோர் தெரிவித்தார்.
கனடா வரலாற்றில் நிகழ்ந்த மிகவும் கொடூரமான சம்பவங்களில் இதுவும் ஒன்று. கடந்த 2020ம் ஆண்டு போலீஸ் அதிகாரி போல் மாறுவேடமிட்ட நபர் நோவா ஸ்கோடியா மாகாணத்தின் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து எரித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர். 2019 இல் டொராண்டோவில் ஒரு நபர், நடைபாதையில் நடந்து சென்றவர்கள் மீது வேனை ஏற்றியதில், 10 பேர் கொல்லப்பட்டனர்.