Tamilசினிமா

கந்துவட்டி கும்பலிடம் சிக்கிய பவர் ஸ்டார் சீனிவாசன்!

சென்னை அண்ணாநகர் எல்.பிளாக்கில் வசித்து வருபவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவரது மனைவி ஜூலி. இவர் கடந்த 6-ந் தேதி தனது கணவரை (பவர்ஸ்டார் சீனிவாசன்) காணவில்லை என்று அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, நிலம் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக பவர்ஸ்டார் சீனிவாசன் தனது மனைவியிடம் கூறாமல் ஊட்டி சென்றிருப்பதும், நிலத்தை பத்திரப்பதிவு செய்ய தனது மனைவி ஜூலியின் கையெழுத்து போட வேண்டி இருந்ததால் அவரையும் ஊட்டிக்கு வரும்படி அழைத்துள்ளதும் தெரியவந்தது.

ஆனால் புகார் கொடுத்த ஜூலி, தனது கணவர் ஊட்டியில் இருப்பதை போலீசாரிடம் தெரிவிக்காமல் ஊட்டிக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து பவர்ஸ்டார் சீனிவாசனை போலீசார் செல்போனில் தொடர்புகொண்டபோது, ஊட்டியில் உள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்து முடித்துவிட்டு சென்னை திரும்பி வந்து விடுவதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதற்கிடையே பவர்ஸ்டார் சீனிவாசன் மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நேற்று ஊட்டியில் இருந்து தனது மனைவியுடன் அண்ணாநகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். தான் சென்னை வந்துவிட்டது குறித்து அவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் காணாமல் போனதாக அவரது மனைவி புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் விசாரணை செய்தபோது நிலம் பத்திரப்பதிவு தொடர்பாக ஊட்டி சென்றதாக தெரிவித்தார். அவர் கடத்தப்பட்டதாக புகார்கள் எதும் வரவில்லை. அவரும் தான் கடத்தப்பட்டதாக கூறவில்லை.

தற்போது பவர்ஸ்டார் வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டதால் அவரது மனைவி கொடுத்த புகாரின் மீதான நடவடிக்கை முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆனாலும் பவர்ஸ்டார் சீனிவாசன், தனது மனைவியிடமே கூறாமல் ஊட்டிக்கு சென்று நிலம் பத்திரப்பதிவு செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான முழு தகவல்களை அவர் எங்களிடம் தெரிவித்தால் மட்டுமே என்ன நடந்தது? என்பது தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *