Tamilசெய்திகள்

கத்தார் நாட்டுக்கு இந்திய பொருட்கள் ஏற்றுமதி – மத்திய அரசு நடவடிக்கை

இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கத்தார் நாட்டுடனான வர்த்தகம் குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகமும் மற்றும் இந்திய வர்த்தக தொழில்துறை குழுமம் இணைந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்திப்பை நடத்தியது.

புவிசார் குறியீடு பெற்றுள்ள வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி குறித்து காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை குழுமத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தூதரக மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது பாசுமதி அரிசி, மாம்பழம், மாதுளம்பழம், வடகிழக்கு பிராந்தியப் பொருட்கள் மற்றும் பல்வேறு பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புக் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், இந்தியா- கத்தார் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவரித்தார். தொடர்ந்து பேசிய மத்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய தலைவர் அங்கமுத்து, புவிசார் குறியீடு உடைய பொருட்கள் மற்றும் இயற்கை தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.