கதைக்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் – ரெஜினா கசண்ட்ரா
தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி ஆகிய படங்களில் நடித்தவர் ரெஜினா. இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. எந்த மாதிரி கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று புரியாமல் இருந்தேன். இப்போது சினிமாவில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அது எனது நிஜ வாழ்க்கையிலும் பயன் அளிப்பதாக உள்ளது.
படம் தோல்வி அடைந்தால் அதில் நான் என்ன தவறு செய்து இருக்கிறேன் என்று யோசிக்கிறேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் என்னை பற்றித்தான் ஆராய்ச்சி செய்கிறேன். நான் படத்தில் என்ன தவறு செய்து இருக்கிறேன். என்னால் படத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று சிந்திக்கிறேன்.
சில நேரம் நான் செய்தது சரி என்று நினைப்பேன். ஆனால் அது தவறாக முடிந்து விடும். விதிமுறைகளை மீற வேண்டியதும் இருக்கும். இப்போது சினிமா என்ன என்பது நன்றாகவே புரிகிறது. தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறேன். தெலுங்கு படமொன்றிலும் நடித்து இருக்கிறேன். கதைக்கு தேவை என்றால் எந்தமாதிரி கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.” இவ்வாறு ரெஜினா கூறினார்.