நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் அருண் பாண்டியன். இவருடைய மகள் கீர்த்தி, கனா புகழ் தர்ஷன் நடிக்கும் பேண்டஸி படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்க இருக்கிறார்.
இது குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் கூறும்போது, “பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன். அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனெனில் அந்த கதாப்பாத்திரங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான சிறப்பான விஷயங்கள் ஏதும் இல்லை” என்கிறார்.
மேலும், “நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட விரும்பவில்லை. நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரையே பெற விரும்புகிறேன். நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள மேடை நாடகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனது தந்தையான அருண் பாண்டியனுடன் விநியோகத் தொழிலில் உதவியாக இருந்தார். சிங்கப்பூரில் சொந்தமாக விநியோக நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
கீர்த்தி பாண்டியன் நடிப்பு திறனையும் தாண்டி, சிறந்த சல்சா மற்றும் பாலே நடன கலைஞராகவும் உள்ளார்.