கண்ணே கலைமானே- திரைப்பட விமர்சனம்
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கண்ணே கலைமானே’ எப்படி என்பதை பார்ப்போம்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயம் படித்த பட்டதாரியான உதயநிதி, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு சொல்வதோடு, தனது சொந்த நிலத்திலேயே இயற்கை உரத்தை தயாரித்து அதை இலவசமாகவும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். அப்படியே கஷ்ட்டப்படும் விவசாயிகளுக்கு வங்கியில் கடன் பெற்றும் தருகிறார். அதே ஊரில் உள்ள அரசு வங்கியின் மேலாளராக வரும் தமன்னா, வங்கியில் கடன் பெற்றுவிட்டு கட்டாதவர்களிடம் கராராக கடனை வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்போது, உதயநிதி பெயரில் பல கடன்கள் நிலுவையில் இருப்பது தெரிய வருகிறது. உடனே அதை வசூலிக்க களத்தில் இறங்கும் தமன்னாவின் அதிரடியான, அதே சமயம் நேர்மையான அணுகுமுறை உதயநிதிக்கு பிடித்துவிட, உதயநிதியின் உதவும் மனபான்மை, எதார்த்தமான வாழ்க்கை முறை தமன்னாவுக்கும் பிடித்துவிடுகிறது. நட்பாக பழகுபவர்கள் காதலர்களாகி சில பல தடைகளுக்கு பிறகு தம்பதிகளாக மாற, அவர்கள் வாழ்க்கையில் எதிர்ப்பாராத பிரச்சினை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது தான் படத்தின் மீதிக்கதை.
காதல் மற்றும் குடும்ப உறவை எதார்த்தாமான முறையில் சொல்லியிருக்கும் சீனு ராமசாமி, அதனுடன் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் கஷ்ட்டங்களையும் மேலோட்டமாக சொல்லியிருக்கிறார்.
உதயநிதி காமெடி படங்களுக்கு மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்ற இமேஜை உடைக்கும் விதத்தில் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. கதாபாத்திரத்திற்கு ஏற்ற முழுமையான நடிப்பை உதயநிதி கொடுக்கவில்லை என்றாலும், அவரது அப்பாவித்தனமான முகம் இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது.
ஹீரோக்களுடன் டூயட், உருகி உருகி காதலிப்பது என்று ரெகுலர் ஹீரோயினாக இல்லாமல், காதலையே வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தும் ஒரு தைரியமான பெண்ணாக தமன்னாவின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. தைரியமான பெண் வேடம் என்பதும் பேச்சிலும், நடிப்பிலும் ஆக்ரோஷத்தை காட்டாமல், பார்வையினாலும், முக பாவனையினாலும் தமன்னா தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
உதயநிதியின் அப்பாவாக நடித்திருக்கும் ‘பூ’ ராம், வடிவுக்கரசி, வசுந்தரா என அனைவரிடத்திலும் பக்குவமான நடிப்பை இயக்குநர் சீனு ராமசாமி வாங்கியிருக்கிறார்.
கிராமத்து படங்கள் என்றாலே, அதிலும் குடும்ப உறவை சொல்லும் படங்கள் என்றாலே ஆக்ரோஷமும், ஆராவாராமும் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் அவை அனைத்தையும் தூக்கி தூரப்போட்டிருக்கும் சீனு ராமசாமி, அமைதியான முறையில் அழகான குடும்ப படமாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் கூட பெற்றோர் காட்டும் நாகரீகமும், அவர்களுக்கு கீழ்படிந்து, அவர்கள் சொல்படி ஹீரோ நடப்பதும், அதே சமயம் தனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் அகிம்சை முறையும் ரசிக்க வைக்கிறது.
பெண்கள் வேலைக்கு போனாலேதிமிர் பிடித்தவர்கள், என்று நினைப்பது மூத்தவர்களின் அறியாமை, என்பதை விளக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, பெண்களின் சமத்துவத்தையும் சில காட்சிகளில் பேசுகிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு நம்மையும் அந்த கிராமத்தில் வாழ வைத்துவிடுகிறது.
காதலை நாகரிகமாகவும், குடும்ப உறவுகளை எதார்த்தமாகவும் காட்டிய இயக்குநர் சீனு ராமசாமி, திரைக்கதையை இயல்பாக அமைத்தது போல, காட்சிகளையும் ரொம்ப சாதாரணமாகவும் அமைத்திருப்பது ரசிக்க வைத்தாலும், ஜனரஞ்சகமான படங்களை விரும்பும் ரசிகர்களிடம் இருந்து படத்தை தள்ளிவைப்பது போல திரைக்கதையை ரொம்ப மெதுவாக நகர்த்தியிருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.
அதிலும், படத்தின் முதல் பாதி மெதுவாக நகர, இரண்டாம் பாதியில் என்னமோ இருக்கிறது, என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களை ஏமாற்றும் விதத்தில் சீனு ராமசாமியின் ட்விஸ்ட் அமைந்திருக்கிறது. இருந்தாலும், டாஸ்மாக் காட்சி, சிகரெட் பிடிக்கும் காட்சி, காதலர்களின் முகம் சுழிக்கும் ரொமான்ஸ், அறுவா கத்தி இல்லாத மதுரை மாவட்டம் என்று எந்தவிதமான நெருடல்களும் இல்லாமல் இப்படத்தை எடுத்திருக்கும் சீனு ராமசாமிக்கு பூங்கொத்து கொடுத்து இதுபோன்ற படங்களை தொடர்ந்து எடுக்க ஊக்குவிக்கலாம்.
மொத்தத்தில், ‘கண்ணே கலைமானே’ தாலாட்டு போல ரொம்ப மென்மையாகவும், இனிமையாகவும் இருக்கிறது.
-ஜெ.சுகுமார்