X

கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் நிறைவடைந்த பாரீஸ் ஒலிம்பிக்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் சீனாவை கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இதில் 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் அடங்கும். சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்களோடு இரண்டாவது இடம் பிடித்தது.

அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 45 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நிறைவு செய்தது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 71 ஆவது இடத்தில் இருந்தது.

33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 26 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்கள் 32 விளையாட்டுகளில் மொத்தம் 329 தங்கப்பதக்கத்துக்கு முட்டி மோதினர்.

உலகின் கவனத்தை ஈர்த்த பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நிறைவடைந்தது. ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இசை வெள்ளத்துக்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், கலைஞர்களின் சாகசங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்புடன் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது.

நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர். இறுதியில் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் நடக்க உள்ள அமெரிக்காவிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது.

117 வீரர், வீராங்கனைகளுடன் பாரீசுக்கு படையெடுத்த இந்தியா இந்த முறை 6 பதக்கங்களுடன் (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) முடித்துக் கொண்டது. இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் 8 வீரர், வீராங்கைகள் நெருங்கி வந்து பதக்கத்தை நழுவ விட்டனர்.
இதனால் அவர்கள் 4 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக பதக்கப்பட்டியலில் இரட்டை இலக்கத்தை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு நிறைவடையவில்லை.