X

கணித பாடத்தில் மாணவிகளை விட மாணவர்களே சிறப்பாக கற்றுக்கொள்கிறார்கள் – ஆய்வில் தகவல்

தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் சி.பி.எஸ்.இ ஆய்வு நடத்தியது.

கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, 720 மாவட்டங்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். கிராமப்புறம், நகர்ப்புறங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்த கேள்விகள், 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 3, 5, 8, 10 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த ஆய்வு முடிவுகளில் கூறியிருப்பதாவது:-

கணித பாடத்தை கற்றுக்கொள்ளும் திறனில் தொடக்க வகுப்புகளில் மாணவ, மாணவிகள் இடையே சமமான நிலை காணப்படுகிறது. ஆனால் அடுத்தடுத்த வகுப்புகளில் இருதரப்புக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கிறது. 3-ம் வகுப்பில் கணித பாடத்தில் மாணவிகளின் தேசிய சராசரி மதிப்பெண் 301 ஆகவும், மாணவர்களின் தேசிய சராசரி மதிப்பெண் 300 ஆகவும் இருந்தது.

ஆனால், 10-ம் வகுப்பில் கணித பாடத்தில், மாணவிகளின் தேசிய சராசரி மதிப்பெண் 216 ஆகவும், மாணவர்களின் மதிப்பெண் 219 ஆகவும் இருந்தது. இதன்மூலம் கணித பாடத்தை மாணவிகளை விட மாணவர்கள் சிறப்பாக கற்றுக்கொள்வது தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில், கணிதத்தை தவிர மற்ற பாடங்களில் மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

அதுபோல், சமூகவாரியாக பார்த்தால், பொதுப்பிரிவு மாணவர்களை விட எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினரின் கல்வித்திறன் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டும் இதேபோன்ற ஆய்வை மத்திய அரசு எடுத்தது. அந்த ஆய்வுடன் ஒப்பிடுகையில், தற்போதைய ஆய்வில் குறிப்பாக கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவ-மாணவிகளின் கல்வித்திறன் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு ஆய்வின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.