X

கணவர் அதிகமாக அன்பு செலுத்துவதால் விவாகரத்து கேட்ட பெண்!

கணவர் அன்பாக இருப்பதில்லை, எனக்காக செலவு செய்வதில் பிரச்சனை, வரதட்சணை கொடுமை போன்ற காரணங்களுக்காக பெண் விவாகரத்து கோருவது நம்மில் பலர் ஆறிந்ததே. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்துக்கு கேட்டதற்கான காரணம் மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா நகரைச் சேர்ந்த பெண், தனது கணவர், தன்னை குழந்தைபோல் பார்த்துக்கொள்ளவதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் விவாகரத்து கேட்டுள்ளார்.

புஜைரா நகரில் உள்ள ஷாரியா கோர்ட்டில் அந்த பெண் கனவரிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அந்த பெண் கூறுகையில், ‘எங்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. என்னுடைய கணவர் இதுவரை ஒருநாள் கூட என்னிடம் சண்டை போடவில்லை.

எப்போதும் என்னிடம் அன்பையும், காதலையும் அளவுக்கதிகமாக காட்டுகிறார். இது எனக்கு நரகமாக இருக்கிறது. என்னை கொடுஞ்சொல்லால் திட்டுவதும் இல்லை. என் கணவரின் அன்பும், கனிவான பேச்சும் ஒவ்வொரு நாளும் கூடுகிறது.

நான் வீட்டை சுத்தம் செய்தால்கூட என்னைக் கேட்காமல் எனக்கு உதவுகிறார். ஒருமுறைக்கூட என்னிடம் வாதம் செய்தது இல்லை. அவரின் உடல் பருமன் பற்றி கூறியபோது, எனக்காக கடினமான உடற்பயிற்சிகளை செய்தார்.

மேலும் எங்கு சென்றுவிட்டு வந்தாலும் ஏராளமான பரிசுகளை வாங்கிக் கொடுத்துவிடுகிறார். ஒருநாளாவது என்னிடம் சண்டைபோடுவார் என எதிர்பார்க்கிறேன். ஆனால், சண்டைக்கு வழியே இல்லை.

எனக்கு உண்மையான விவாதம், சண்டை தேவை. இதுபோன்ற அளவுக்கு அதிகமான அன்பும், எனக்கு கட்டுப்பட்டு நடக்கும் கணவரும் பிடிக்கவில்லை. எனவே அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும்’ என கூறியுள்ளார்.

இந்தவழக்கில் அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், ‘என் மனைவியிடம் இருந்து என்னை பிரித்துவிடாதீர்கள். நான் எப்போதும் சிறந்த, கனிவான கணவராக இருக்கவே நினைக்கிறேன்” என கூறியுள்ளார். கணவன், மனைவி இருவரும் அமர்ந்து மீண்டும் மனம்விட்டு பேசுவிட்டு கூறுங்கள் என தெரிவித்து கோர்ட், வழக்கை ஒத்தி வைத்துவிட்டது.