X

கணவரை விவாகரத்து செய்யும் சமந்தா? – வைரலாகும் தகவல்

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வந்துள்ளன.

திருமணத்துக்கு பிறகு சமந்தா தனது பெயருக்கு பின்னால் நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சேர்த்து இருந்தார். சமூக வலைத்தளத்திலும் சமந்தா அக்கினேனி என்றே குறிப்பிட்டு இருந்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு வலைத்தள பக்கத்தில் அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு எஸ் என்ற ஆங்கில வார்த்தையை மட்டும் குறிப்பிட்டார். இதை வைத்தே இருவரும் பிரியப்போகிறார்கள் என்று பேசப்பட்டது.

சமந்தா தற்போது நாக சைதன்யாவுடன் இல்லை என்றும், 4 மாதங்களாகவே தனியாகத்தான் வசித்து வருகிறார் என்றும், இருவரும் விவாகரத்துக்கு தயாராகி உள்ளனர் என்றும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் திருப்பதி வந்த சமந்தாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்காமல் கோபப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவையும், நாக சைதன்யாவையும் சேர்த்து வைக்க 4 முறை சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தும் விவாகரத்தில் இருவரும் உறுதியாக இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள். விவாகரத்து பெறும்பட்சத்தில் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா ரூ.50 கோடி வரை கொடுக்க சம்மதித்து உள்ளதாக ஒரு தெலுங்கு இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.

சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடிப்பது நாகசைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும், அவர்கள் எதிர்ப்பை மீறியே பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்தார் என்றும், இதுவே பிரிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.