கணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவி
தெலுங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் குடும்பத்தகராறில் ஸ்ரீகாந்த் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே ஸ்ரீகாந்த் வாரங்கலில் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனை அறிந்த அகிலா அதிர்ச்சி அடைந்தார். இதனால், அகிலா தனது குடும்பத்தினர் உதவியுடன் ஸ்ரீகாந்த்தை தனது ஊருக்கு அழைத்து வந்தார்.
பின்னர் அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்து செருப்பு மாலை அணிவித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்ரீகாந்த்தை மீட்டனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை மனைவி செருப்பால் அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.